காட்டு யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது மாணவர்களுக்கு மாவட்ட வன அதிகாரி அறிவுரை

காட்டு யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று களிறு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மாவட்ட வன அதிகாரி அறிவுரை வழங்கினார்.

Update: 2017-11-21 22:30 GMT

கோவை,

கோவை மாவட்ட வனப்பகுதி காட்டு யானைகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக இருப்பதால், இங்கு ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இதுதவிர கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் யானைகளுக்கு கோவை மாவட்ட வனப்பகுதி வலசைபாதையாக (வழிப்பாதை) இருப்பதால் ஏராளமான யானைகள் வந்து செல்கின்றன. இவ்வாறு செல்லும் யானைகள் மலையடிவார பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

யானை–மனித மோதல் காரணமாக உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதை குறைப்பதற்காக வனத்துறை சார்பில் ‘களிறு’ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதுடன், இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மலையோர கிராமங்களை சேர்ந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அருகே உள்ள சாடிவயல் வனப்பகுதியில் நடந்தது. வனச்சரக அதிகாரிகள் செந்தில்குமார் (மதுக்கரை), சிவா (போளுவாம்பட்டி), வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட வன அதிகாரி சதீஷ் கலந்து கொண்டு யானை–மனித மோதல் நடப்பதை தடுப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த சிறப்பு திட்டமான களிறு என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் யானை–மனித மோதலை முற்றிலும் குறைப்பதுதான். எதற்காக யானை–மனித மோதல் அதிகம் ஏற்படுகிறது என்றால், நாம் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்லும்போதுதான், அவற்றிடம் சிக்கி விடுகிறோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையடிவாரத்தில் அகழி அருகே நின்றிருந்த காட்டு யானைகளை சில இளைஞர்கள் சீண்டியதுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். இவ்வாறு யானைகளை சீண்டுவதால் அவைகளுக்கு கோபம் அதிகமாகி யானை–மனித மோதல்தான் அதிகமாகும். எனவே யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கும் இதுபோன்ற செயல்களை மாணவ–மாணவிகள் செய்யக்கூடாது. ஊருக்குள் வரும் காட்டு யானைகள் மீது கற்களை தூக்கி வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.

சிலர் வித்தியாசமான புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விடுகிறார்கள். பின்னர் அங்கு நிற்கும் யானைகளிடம் சிக்கிவிடும் நிலை ஏற்பட்டு வருகிறது. எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். அத்துடன் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

யாராவது வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தாலோ, அல்லது யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை சீண்டினாலோ வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்