பழைய வாடகையை ஏற்க மறுப்பு: உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்தகோரி 500 வியாபாரிகளுக்கு நோட்டீசு

பழைய வாடகையை ஏற்க மறுத்து, உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த கோரி 500 வியாபாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

Update: 2017-11-21 22:30 GMT

ஊட்டி,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, ஊட்டியில் நகராட்சி மூலம் மார்க்கெட் தொடங்கப்பட்டது. இங்கு நீலகிரியில் விளையக்கூடிய மலைக்காய்கறிகள் மற்றும் காய்கறி சூப்புக்கு பயன்படுத்தப்படும் இலைகள், இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டன. அதன்பிறகு மார்க்கெட் விரிவுப்படுத்தப்பட்டது. இதையடுத்து அரிசி, மளிகை பொருட்கள் மொத்த விற்பனை பகுதியும், மளிகைக்கடைகள், துணி, பிளாஸ்டிக், இறைச்சி, மீன் மற்றும் பழக்கடைகள், காய்கறி ஏல மையம் இயங்கி வருகிறது.

நகராட்சி மார்க்கெட் மேல்பகுதி, சேரிங்கிராஸ், புளுமவுண்டன், எட்டின்ஸ்சாலை, பிங்கர்போஸ்ட், காந்தல் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான ஒய்.எம்.சி.ஏ. பகுதியிலும் வணிக வளாகங்கள் கட்டப் பட்டு உள்ளன. மார்க்கெட்டில் உள்ள சுமார் 800–க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங் களில் உள்ள 300–க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடியே 70 லட்சம் வருமானம் கிடைத்து வந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடைகளை மறு ஆய்வு செய்து வாடகையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வாடகை மற்றும் டெபாசிட் ரூ.12 கோடி என மொத்தம் ரூ.24 கோடி நகராட்சிக்கு வருமானமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த வாடகை உயர்வை செலுத்தக்கோரி வியாபாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. வாடகை செலுத்தாவிட்டால் கடைகளை மறுஏலம் விடவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் நகராட்சி உயர்த்திய வாடகையை கொடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறிமார்க்கெட் வியாபாரிகள் சார்பில் அரசுக்கு மேல்முறையீடும், கடையடைப்பு போராட்டமும் நடை பெற்றது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட கடை வாடகையை, சில கடை வியாபாரிகளிடம் இருந்து ரூ.40 லட்சத்தை நகராட்சி அதிரடியாக வசூல் செய்தது.

ஆனாலும் மார்க்கெட் வியாபாரிகள் சிலர் உயர்த்தப்பட்ட வாடகையை தங்களால் செலுத்த முடியாது என்றும், பழைய வாடகையை செலுத்துவதாக கூறி 800–க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வங்கியில் வரைவோலை (டி.டி.) எடுத்து நகராட்சிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்து உள்ளனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் மார்க்கெட் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது. ஊட்டியில் வியாபாரிகள் பழைய வாடகையையே செலுத்துவதாக கூறி வரைவோலைகளை (டி.டி.) நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். அதை நகராட்சியால் ஏற்க முடியாது. எனவே, அந்த வரைவோலைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

வியாபாரிகளில் ஒரு சிலர் நிறைய கடைகளை பிடித்து வைத்துக் கொண்டு உள்வாடகைக்கு விட்டு உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து சென்னை நகராட்சி நிர்வாக கமி‌ஷனருக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட வாடகையையே வியாபாரிகள் செலுத்த வேண்டும். இதற்காக நகராட்சி கடை வியாபாரிகள் 500 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்