வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 5 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 5 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
காரைக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை அடுத்த பிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 38). இவர் அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார், அருண், பிரதீப் ஆகிய 3 பேரையும், காரைக்குடி ஜீவாநகரை சேர்ந்தவர் ஜான்பிரகாஷ் என்பவர் மூலமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜ்குமார் உள்பட 3 பேரும் தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.21 லட்சத்தை ஜான்பிரகாசிடம் கொடுத்துள்ளனர். ஆனால் ஜான்பிரகாஷ் கூறியபடி அவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சரியான பதில் ஏதும் கூறாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று முருகன் தனது ஊரை சேர்ந்தவர்களான ராஜ்குமார், அருண், பிரதீப் ஆகியோருடன் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர் ரூ.3 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து முருகன் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜான்பிரகாஷ், அவரது தாய் சாந்தி, சகோதரி ரோஸ்லின், சகோதரன் பிரபுதாஸ் மற்றும் உறவினர்கள் மகிபாலன், பிரபாகரன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது உறவினர்களான ராசு, சூர்யபிரகாஷ் ஆகியோரை அதே காரைக்குடி, ஜீவாநகரை சேர்ந்த ஜான்பிரகாஷ் மூலமாக கனடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். இதனையடுத்து ராசு மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் தலா ரூ.9 லட்சம் வீதம் ரூ.18 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் ஜான்பிரகாஷ் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் ஜான்பிரகாஷ், அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.