பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி 2–வது நாளாக வங்கியில் விவசாயிகள் முற்றுகை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செலுத்திய 314 விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-11-21 22:30 GMT

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த புளியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செலுத்திய 314 விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் அந்த தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கூட்டுறவு வங்கியில் நேற்று 2–வது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

 இந்தநிலையில் நேற்று மாலை அந்த வங்கியில் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி துணை பதிவாளர் ராமநாதன், தாசில்தார் சிவசம்போ, துணை தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் வருகிற 24–ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கூட்டுறவு துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி காப்பீட்டு தொகை வழங்க இறுதி செய்யப்படும் என்று கூறினர். இதனையடுத்து விவசாயிகள் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 முன்னதாக போராட்டத்தில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ராஜபாண்டியன், அமைப்பாளர் பருத்தியூர் மாணிக்கம், செயலாளர் கிளியூர் வேலு, வட்டாரத்தலைவர் சூசைமுத்து, ராசு, அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்