வாலாஜாபாத் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2017-11-21 06:02 GMT
வாலாஜாபாத்,

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சிதம்பரம்(வயது 25). இவர், வாலாஜாபாத் சேர்க்காடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, ஓரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் தொழிற்சாலை விடுமுறை என்பதால் சிதம்பரம், தனது நண்பர் சீனு என்பவருடன் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றார்.

மீன்பிடிக்கும்போது ஏரியின் உள்ளே நீர் காகம் முட்டை இருப்பதை கண்ட சிதம்பரம், அதை எடுக்க ஏரியில் இறங்கி நீந்திச்சென்று அந்த முட்டையை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர் சீனு, வாலாஜாபாத் போலீசார் மற்றும் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகு மூலம் சென்று ஏரியில் மூழ்கி பலியான சிதம்பரத்தின் உடலை தேடினர். ஆனால் இருள் சூழ்ந்து விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
நேற்று 2-வது நாளாக சிதம்பரம் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்