மாயமான தொழிலாளி மலையில் பிணமாக கிடந்தார் கொலையா–தற்கொலையா? போலீசார் விசாரணை

ஆரல்வாய்மொழி அருகே மாயமான தொழிலாளி மலையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-11-20 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி, கனகமூலம் பகுதியை சேர்ந்தவர் சுடலை மாடன் (வயது 32), செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கடந்த 10–ந் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்பு சுடலை மாடன் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து உறவினர்கள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுடலை மாடனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவ்வையார் அம்மன் கோவில் பின்பகுதியில் உள்ள மலை பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் சிலர் சென்றனர். அப்போது மலையில் ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. தொழிலாளிகள் அருகில் சென்று பார்த்த போது அங்கு பாறைகளுக்கு இடையே ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்தவர் யார்? என்று விசாரித்த போது, மாயமான தொழிலாளி சுடலை மாடன் என தெரியவந்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்