சிலை திருட்டு வழக்கு: டிசம்பர் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு கும்பகோணம் கோர்ட்டு உத்தரவு

சிவன் கோவில் சிலை திருட்டு வழக்கினை டிசம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-11-20 23:00 GMT
கும்பகோணம்,

ஈரோடு-மேட்டூர் சாலையில் உள்ள ஒரு விடுதியில் சாமி சிலைகளை விற்பனை செய்ய முயன்ற ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன் (வயது 48), சந்திரசேகரன் (50), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் (50) ஆகிய 3 பேரையும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட மரகதலிங்க சிலை மற்றும் மரகதநந்தி சிலையும் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சிலை திருட்டு வழக்கில் கஜேந்திரன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிறையில் உள்ள 3 பேரையும் 2 நாட்கள் போலீஸ்காவலில் விசாரணை செய்ய அனுமதிக்கக்கோரி சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கோர்ட்டில் மனு அளித்தனர். அதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்தநிலையில் போலீஸ்காவல் முடிந்து நேற்று சந்திரசேகரன், கஜேந்திரன், மணிராஜ் ஆகிய 3 பேரையும், சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி வழக்கை ஒத்திவைத்து, அன்று அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

மேலும் செய்திகள்