திண்டுக்கல் அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு

திண்டுக்கல் அருகே உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வந்ததாக கூறி, பணம் நிரப்ப வந்த வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-20 23:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துப்பட்டியை அடுத்த மைலாப்பூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு, அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் சதீஷ் (வயது 28) என்பவர் கடந்த 12-ந்தேதி பணம் எடுத்துள்ளார். அவர் எடுத்த ரூ.9 ஆயிரத்தில், ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தது. அதனை பார்த்தபோது லேசாக கிழிந்து, கசங்கிபோய் இருந்தது.

மேலும், அது கள்ளநோட்டு என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல்லில் உள்ள அந்த வங்கி கிளைக்கு வந்து கேட்டுள்ளார். ஆனால், இது எங்கள் ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், வேறு எங்காவது எடுத்து இருப்பீர்கள் என்றும் கூறி வங்கி மேலாளர் திட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து, நேற்று அவர் தனது கிராம மக்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே, நேற்று அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்கான வாகனம் வந்தது. உடனே கிராம மக்கள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார், சதீஷ் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் வங்கி மேலாளரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தங்களது வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளநோட்டு இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக வங்கி மேலாளர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்