மாநில மக்களை தன்னிறைவு பெற்றவர்களாக கொண்டுவர வேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்

புதுவை மக்களை தன்னிறைவு பெற்றவர்களாக கொண்டுவர வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி விருப்பம் தெரிவித்துள்ளார்.;

Update:2017-11-21 04:30 IST
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் துப்புரவு பணியில் ஈடுபடுவது, ஆய்வு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். சமீப காலமாக அவர் ஆய்வுக்கு செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நலத்திட்டங்களை அவர் தடுப்பதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் பண்டசோழநல்லூருக்கு சென்றபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். புதுச்சேரியை விட்டு வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கவர்னர் கிரண்பெடி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தநிலையில் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை மக்கள் சுயமாக செயல்பட பெரிய அளவில் உதவிகள் தேவைப்படுகிறது. அவர்கள் சார்ந்திருக்கும் நிலையைவிட்டு படிப்படியாக அவர்களை மீட்டு தன்னிறைவு பெற்றவர்களாக கொண்டுவர வேண்டும்.

அவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க செய்வது, திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் திறமையை வளர்த்துக்கொள்ள செய்வது, சிறு தொழில் தொடங்க கடனுதவி செய்வது ஆகியவை அரசின் கடமையாகும். இதற்கான திட்டங்கள் நபார்டு மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களில் அதிகம் உள்ளது.

மேலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் நிதி ஆதாரம் புதுவை மக்களுக்கு அதிக தேவையாக உள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடந்து பல ஆண்டுகளாகிறது. மக்கள் தங்களது கிராமங்களை அவர்களாகவே சுயமாக நிர்வகித்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதுபற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இதை தமிழில் பேசி தெரிவிக்க எனக்கு தெரிந்திருந்தால் அவர்களது உரிமைகளை விளக்கியிருப்பேன். அவர்களது எனது நிலையை தெரிந்துகொண்டிருப்பார்கள்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி தனது பதிவில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்