அரசு சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு

புதுவை அரசு சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

Update: 2017-11-20 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை அரசின் சாலைப்போக்குவரத்துக் கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து கடந்த 19-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இதனால் அரசின் சாலைப்போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை அரசு பஸ்கள் இயங்காத நிலையில் சுற்றுலா வந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நேற்று அதிகாலை முதல் தமிழக அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

பொதுமக்கள் பாதிப்பு

ஊழியர்களின் போராட்டம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் சாலைப்போக்குவரத்துக் கழகத்துக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்