குடிசைகளை காலி செய்ய மறுத்து திடீர் நகர் பகுதி மக்கள் சாலை மறியல்

குடிசைகளை காலி செய்ய மறுத்து திடீர் நகர் பகுதி மக்கள் சாலை மறியல் அதிகாரிகள், போலீசாருடன் வாக்குவாதம்;

Update: 2017-11-20 22:45 GMT
சென்னை,

சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் திடீர் நகர் உள்ளது. குடிசைகள் அதிகம் நிறைந்த இப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

அதாவது, குடிசைகளை காலி செய்துவிட்டு, செம்மஞ்சேரியில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இன்றைக்குள் சென்றுவிடுமாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு அங்கு செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று மாலை அங்கு வந்த அதிகாரிகள், வீட்டை காலி செய்வதற்கான கெடு முடிந்துவிட்டதாகவும், நாளை (அதாவது இன்று) காலை வீடுகளை அப்புறப்படுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செம்மஞ்சேரி பகுதி வெகு தொலைவில் உள்ளதாகவும், அங்கு செல்ல முடியாது என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்த பொதுமக்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

குடிசை வீடுகளை இன்று காலை அப்புறப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நேற்று இரவே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்