ஓட்டல்களில் வாழைஇலையை பயன்படுத்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

ஓட்டல்களில் வாழைஇலையை பயன்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2017-11-20 23:00 GMT
கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். நடைபாதை, மின்சாரம், தெருவிளக்கு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி, செயலாளர் திருஞானசம்பந்தம், சக்திவேல் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கைகளில் வாழை இலை, பாக்குமட்டை, எவர்சில்வர் டம்ளர் உள்ளிட்ட பொருட்களுடன் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாழை இலையை தரையில் விரித்து அமர்ந்து உணவகங்களில் பிளாஸ்டிக் இலை மற்றும்பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி கோஷமிட்டனர். பின்னர், அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உணவகங்கள், பேக்கரி கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் இலைகளை பயன்படுத்துகின்றனர். சூடான டீ, காபி போன்றவற்றை பிளாஸ்டிக் கவரில் கட்டி கொடுப்பதால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் இலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். உணவகங்களில் வாழை இலை மற்றும் பாக்கு மட்டையால் செய்த தட்டுகளை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண் டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். டீக் கடைகளில் எவர்சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மகளிர் சுயஉதவி குழு தலைவி லட்சுமி தலைமையில் கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு, அவினாசியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் புளியம்பட்டியில் 2¾ சென்ட் நிலம் ரூ.79 ஆயிரம் என்றும், இதை மாதத்தவணையில் வாங்கி தருவதாகவும் கூறினார். இதை நம்பி நாங்கள் 35 பேர் மாதத்தவணையாக பணம் கட்டி முடித்தோம்.

அதன்பிறகு நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஒவ்வொருவரிடமும் ரூ.24 ஆயிரம் வசூலித்தார். ஆனால் அவர் கூறியபடி இடம் வாங்கித்தர வில்லை. மேலும் எங்களிடம் வசூலித்த ரூ.30 லட்சம் பணத்தையும் திருப்பி தர வில்லை. எனவே அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசனார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது ஒருவர் ராமர் போன்று வேடம் அணிந்து, கையில் வில் வைத்து இருந்தார். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கடந்த தேர்தலின் போது பா.ஜனதா கட்சி அறிவித்தபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்