குடிநீருக்காக போராடும் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

வைகை அணை அருகே உள்ள கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீருக்காக கிராம மக்கள் போராடி வருகிறார்கள். மேலும் அடிப்படை வசதிகளும் இல்லாததால் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2017-11-20 10:41 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கோவில்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. வைகை அணையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக இந்த ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில ஓரளவு மழை பெய்து அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் சீரடைந்து வரும் நிலையில், கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குருவியம்மாள்புரம், கோவில்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்கதையாகி வருகிறது. இந்த கிராமங்களில் முறையான குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாமல், தரையில் பள்ளம் தோண்டி தண்ணீர் செல்லும் குழாய்களில் இருந்து நேரடியாக தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

அதிலும் போதுமான தண்ணீர் வராததால் அந்த கிராம மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். மேலும் மிக அருகில் வைகை அணை இருந்தும் குடிநீர் கிடைக்காமல் போராடி வருகிறோம் என்று பொதுமக்கள் பரிதாபமாக கூறுகின்றனர். குடிநீர் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் அதிகமான மக்கள் வசிக்கும் கோவில்பட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். சாக்கடையை முறையாக தூர்வாராததால் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவில்பட்டி கிராமத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அடிப்படை வசதிகள் இல்லாத கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தேவையான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்