விழுப்புரத்தில் கூட்டுறவு வார விழா அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

Update: 2017-11-20 10:35 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா மஹாலில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராஜேந்திரன், காமராஜ், ஏழுமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, சக்கரபாணி, மண்டல கூட்டுறவு இணைபதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு பரிசுகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு கடனுதவிகளை வழங்கி பேசினார்.

இந்தியாவிலேயே கூட்டுறவு துறை சிறப்பாக நடைபெறும் மாநிலம் தமிழகம் தான். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு 68 ஆயிரத்து 340 சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் கடன்தொகையான ரூ.358 கோடியே 67 லட்சத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். அதே போல் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-18 ம் ஆண்டிற்கு ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் இந்த அரசுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழாவில் அ.தி.மு.க. (அம்மா-புரட்சித்தலைவி அம்மா அணி) ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சிந்தாமணி வேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, நகர சபை முன்னாள் துணை தலைவர் முகமது ஷெரிப், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகவேல், நகர கூட்டுறவு வங்கி தலைவர்கள் சுப்பிர மணியன், சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் உமாசங்கர், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கூட்டுறவு சங்க தலைவர் பசுபதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்