தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.3ஆயிரத்து 66 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 66 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2017-11-20 10:30 GMT
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் வரவேற்றார். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மலர்விழி கூட்டுறவு திட்டங்கள் குறித்து பேசினார். எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் பொன்சரஸ்வதி, பாஸ்கர், சந்திரசேகர், மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயமும், கூட்டுறவுத் துறை சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும் வழங்கினார்கள். மேலும் அவர்கள் 2,313 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், மத்தியகால கடன், சுயஉதவிக்குழு கடன், தொழில் கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன் என ரூ.16 கோடியே 54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நாமக்கல் மாவட்ட அளவில் சிறந்த கைத்தறி கூட்டுறவு சங்கத்திற்கான விருது திருச்செங்கோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், மேலாண்மை இயக்குனர் கவுதமன், மேலாளர் பொன்னுசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள்

தமிழக அரசு, கூட்டுறவுத்துறை மறுமலர்ச்சி பெறும் வகையில் முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்களும் கடன்பெற்று வாழ்வில் முன்னேற பல்வேறு கடன்களை அளித்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இத்துறையில் பெரும் முறைகேடுகள் நடந்தன.

விவசாயிகள் கந்துவட்டி, கடன் சுமையில் இருந்து விடுபட நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 1,515 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மறுமலர்ச்சி பெறும் வகையில், 22 ஆயிரத்து 252 கூட்டுறவு சங்கங்களில் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்களும் கடன்பெற்று வாழ்வில் முன்னேற பல்வேறு கடன்களை அளித்து வருகிறது.

தமிழக அரசு மீது தொடர்ந்து குறைகூறிவரும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் மன நிலையை அறிந்து செயல்பட வேண்டும். உண்மைக்குப் புறம்பான தகவல்களை கூறிவிட்டு, போராட்டங்கள் நடத்துவது பொருந்தாது. மக்கள் அ.தி.மு.க. ஆட்சியையே விரும்புகின்றனர். கூட்டுறவு துறையில் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெற வழிவகை செய்யப்பட்டு, சுமார் 42 ஆயிரம் பேருக்கு ரூ. 158 கோடி வட்டியில்லா கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை விவசாயிகளுக்கு ரூ.3ஆயிரத்து 66 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஆந்திரா, குஜராத், மத்தியபிரதேசம் உத்தரபிரதேசம் மாநிலங்களை விட தமிழகம் சாதனை படைத்துள்ளது. இம்மாதம் 15-ந்தேதிவரை இத்திட்டத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 163 கோடி காப்பீட்டுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல பொது வினியோகத் திட்டமும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

விழாவில் நாமக்கல் மற்றம் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர்ஆர்.சின்னுசாமி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத்தலைவர் மின்னாம்பள்ளி கே.நடேசன் மற்றும் நாமக்கல் மாவட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், இயக்குநர்கள், கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளர் முகமது சலீம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்