பெரம்பலூரில் இளைஞர்கள் மண்ணை கொட்டி சமப்படுத்தினர்

சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பெரம்பலூரில் இளைஞர்கள் மண்ணை கொட்டி அதனை சமப்படுத்தினர்.

Update: 2017-11-20 09:58 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரி அருகே திருநகர் பகுதியில் உள்ள சாலை முறையாக பராமரிக்கப்படாததால் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி வழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்த குண்டும்-குழியுமான சாலையில் நிலைதடுமாறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்லும் போது சாலையில் கிடந்த ஜல்லிக்கற்கள் டயரில் பட்டு தெறிப்பதால் நடந்து செல்பவர்களும் காயமடைந்திருக்கின்றனர். அந்த சாலையின் அருகே தான் பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியும் உள்ளது. பெற்றோர் தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு இந்த சாலை வழியாக செல்லும் போது அச்சத்துடனேயே செல்ல வேண்டியிருக்கிறது.

பலமுறை எடுத்து கூறியும் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பெரம்பலூர் இளைஞர்கள் மற்றும் புதிய பயணம் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து நேற்று மூட்டை மூட்டையாக மண் கொண்டு வந்து இந்த சேதமடைந்த சாலையில் கொட்டினர். பின்னர் ஆளுக்கொரு மண்வெட்டியை பிடித்து கொண்டு அந்த மண்ணை பள்ளமான இடங்களில் பரப்பி விட்டு சமப்படுத்தினர்.

இந்த சேதமடைந்த சாலை, உயிரை காவு வாங்கி விடக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தான் இளைஞர்கள் திரண்டு முதல் கட்டமாக மண்ணை கொட்டி சமப்படுத்தியுள்ளோம். இது தற்காலிகமானது தான். மாவட்ட நிர்வாகம் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சாலையில் தார்-ஜல்லிக்கற்கள் கலந்த கலவையை போட்டு சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிருபர்களிடம் அந்த இளைஞர்கள் கூறினர். பொதுநல நோக்குடன் இருந்த இளைஞர்களின் செயல்பாட்டுக்கு அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்