கிரிவலப்பாதை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு நோட்டீஸ்

தீபத்திருவிழாவுக்குள் கிரிவலப்பாதை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி கூறினார்.

Update: 2017-11-20 09:34 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சி சாலையில் இடதுபுறமாக உள்ள சாலையை அகலப்படுத்தி நடைபாதை அமைக்கும் பணியும், வலதுபுறம் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

தேரடி தெரு, திருவூடல் தெரு பகுதிகளில் பக்தர்கள் நடந்து செல்லும் போது கால் வழுக்காத வகையிலான கற்களை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்குள் விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமையில் கோர்ட்டு ஊழியர்கள் குழந்தை திருமண ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி கிரிவலப்பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோவில், குபேரலிங்க கோவில், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அப்போது கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் விரிவாக்க பணியினை நீதிபதி மகிழேந்தி பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பின்னர் அவர்கள் கிரிவலம் செல்வார்கள். தற்போது கிரிவலப்பாதையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

இதில் சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளன. மேலும் பொதுமக்கள் செல்லும் வழிகளில் கால்வாய் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதைகள் துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது.

தீபத்திருவிழாவிற்குள் உள்ளூர் மக்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் கிரிவலப்பாதை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் மூலம் நெடுஞ்சாலைத்துறைக்கு நோட்டீஸ் இன்று (நேற்று) வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்