நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள்

நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள் என்று சித்தராமையா கூறினார்.

Update: 2017-11-19 23:17 GMT

பெங்களூரு,

பெங்களூரு விவசாய பல்கலைக்கழகம் சார்பில் விவசாய மேளா பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:–

நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். விவசாயிகள் சுயசார்பு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டியது அவசியம். அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற அரசும், விவசாய பல்கலைக்கழகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

விவசாய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் அதிக அறுவடை வழங்கும் புதிய விதைகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்க முயற்சி செய்ய வேண்டும். விவசாயம் லாபகரமான தொழிலாக மாறினால் மட்டுமே, விவசாயிகள் தங்களின் வாழ்க்கையை சிறப்பான முறையில் கட்டமைத்துக்கொள்ள முடியும். விவசாயிகள் விற்பனை செய்யும் விளைபொருட்களுக்கு புதிய விதிமுறைகளை விதிப்பது அவர்களுடைய நலனை பாதிப்பதாக அமையும்.

கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு உதவ ஆதரவு விலையை வழங்கி நாங்கள் விளைபொருட்களை கொள்முதல் செய்கிறோம். கடந்த ஆண்டு 450 லட்சம் குவிண்டால் துவரை கொள்முதல் செய்தோம். அதே போல் நெல், கேழ்வரகு, கரும்பு போன்றவற்றுக்கும் அரசு ஆதரவு விலையை வழங்குகிறது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்