ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியதில் தவறு இல்லை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியதில் தவறு இல்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2017-11-19 23:15 GMT
சென்னை,

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நேற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் சார்பில், சென்னை போரூர் கணபதி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டு இந்திரா காந்தியின் உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அங்கு நடைபெற்ற பட்டிமன்றத்தை கண்டுரசித்தனர். இதையடுத்து இலவச தொழில் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினார்கள்.

விழாவில் குஷ்பு பேசியதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அல்ல, எந்நாளும் தலைவர் இளங்கோவன்தான். நான் காங்கிரசில் இருப்பதற்கு காரணமே அவர்தான். காங்கிரசின் மிகப்பெரிய பலம் தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள்.

பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ என்று என்னென்னவோ திட்டங்களை அறிவிக்கிறார். பின்னர் வெளிநாட்டுக்கு ஓடி விடுகிறார். உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்கிறார். அவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராகத்தான் பார்க்கப்படுகிறார். இவர்கள் கோட்சேவை தியாகி என்று கூறுகின்றனர். நாட்டுக்காக உயிரை கொடுத்தவர்கள் காங்கிரசில் உள்ளனர்.

தமிழகத்தில் காமெடி ஆட்சிதான் நடக்கிறது. ஒரு நேரத்தில் நீயா, நானா என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள், இப்போது ராமர்-லட்சுமணரை போல் தோளில் கைப்போட்டு ஒன்றுசேர்ந்து அலைகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-

பெண்கள் என்றால் அரட்டை அடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும்தான் என்று நினைத்தவர்கள் மத்தியில் பெண்களும் நாடாள முடியும் என்று எடுத்துக்காட்டாக இருந்தவர் இந்திரா காந்தி. 35 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு விழா எடுக்கிறோம். பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, நாட்டை காப்பதிலும் முன்னோடியாக இருந்தார்.

பாகிஸ்தான் படை எடுத்த போது, அதனை இரண்டாக பிளந்தவர் இந்திரா காந்தி. இந்த தலைவர்கள் நாட்டுக்காக உழைத்தவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்காக உயிரையும் கொடுத்தவர்கள்.

ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆனால் தங்களை அனாதையாக விட்டு சென்று விட்டார் என்று சிலர் கூறுகின்றனர். கோவிலில் எப்படி வருமான வரி சோதனை செய்யலாம் என்கின்றனர். ஜெயலலிதா வீட்டில் தற்போது சோதனை நடத்தியதில் ஒன்றும் தப்பு இல்லை. அங்கு ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டு பணம், நகை, புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். கோமாளித்தனமாக பேசுபவர்கள்தான் தமிழகத்தில் அமைச்சர்களாக உள்ளார்கள். தமிழக மீனவர்களை யார் சுட்டார்கள்? என்று தெரியவில்லை என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகின்றார். ஆனால் மத்திய கடலோர காவல் படையே இதற்கு வருத்தம் தெரிவித்தது.

மத்தியிலும், மாநிலத்திலும் கொடூரமான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக கவர்னர், தனது அதிகாரத்தை மீறி நடந்து கொள்கிறார். ஒருவேளை ஜனாதிபதி இவ்வாறு செயல்பட்டால் பிரதமர் மோடி அதை ஏற்றுக்கொள்வாரா?. இதை அனுமதிக்கக்கூடாது. இது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்றுவது குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும். பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து நீதிமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது. உண்மையில் குற்றம் செய்யாத பட்சத்தில், பேரறிவாளனை விடுதலை செய்தால் அதனை ஏற்றுக்கொள்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பீட்டர் அல்போன்ஸ், நாசே ராஜேஷ், பாலமுருகன் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்