பதவியை காப்பாற்றிக்கொள்ள மோடியிடம் தமிழக ஆட்சியாளர்கள் சரணாகதி அடைந்துவிட்டார்கள்

பதவியை காப்பாற்றிக்கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் பிரதமர் நரேந்திரமோடியிடம் சரணாகதி அடைந்துவிட்டார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-11-19 23:15 GMT
புதுச்சேரி,

இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவினையொட்டி கருத்தரங்கு புதுவை கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

கருத்தரங்கில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நமது இளந்தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி வருகிறார். மத்தியில் இப்போது சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. மாநிலங்களுக்கு உரிய உரிமையை அவர்கள் தருவதில்லை. திட்டக்கமிஷனை அவர்கள் நீக்கியதற்கான காரணம் என்ன?

பிரதமர் வாய்சவடால்தான் செய்கிறார். விளம்பர ஆட்சிதான் மத்தியில் நடக்கிறது. ஆட்சியாளர்களிடம் புதிய திட்டங்களும் ஏதும் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது விமான ஊழல் வெளிவந்துள்ளது. பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊழல் நடக்கிறது. ஆனால் அவற்றைப்பற்றி பேசுவதில்லை.

ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டும் திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள். சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு என பலவற்றை கொண்டு ரெய்டு நடத்துகிறார் கள். ஆனால் எந்த ரெய்டு மூலமும் உண்மை வெளிவரவில்லை.

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள பிரதமர் மோடியிடம் சரணாகதி அடைந்துவிட்டார்கள். புதுவை கவர்னருக்கு ஓரளவுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும் தமிழகத்தில் அப்படி அல்ல. அமைச்சரவையின் முடிவினை ஏற்பதுதான் அவரது கடமை. ஆனால் தமிழக அமைச்சர் ஒருவர், கவர்னர் ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது என்கிறார். இன்னொருவர் கவர்னர் ஆய்வு செய்வது தவறில்லை என்கிறார்.

மோடியிடம் அ.தி.மு.க. விலைபோய் விட்டது. தமிழகத்தை பாரதீய ஜனதா ஆட்டிப்படைக்கிறது. ஏமாந்த கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என்றால் முதுகெலும்பு இருக்கவேண்டும். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது. ஆனால் தமிழகத்தில் வாய்மூடி மவுனியாக பேச முடியாமல் அடிமைகளாக அமைச்சர்கள் உள்ளனர். மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு. கவர்னருக்கு அல்ல. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது நியமிக்கப்பட்ட கவர்னர்கள் இதுபோல் எல்லாம் செய்ததில்லை.

புதுவை கவர்னர் கிரண்பெடி வெற்று விளம்பரத்துக்காக செயல்படுகிறார். இதற்காகத்தான் குப்பைகளை கூட்டுகிறார். விளம்பர பிரியர்தான் அவர். வாரிய தலைவர்கள் நியமனத்துக்காக கோப்புகள் அனுப்பி ஒரு வாரம் ஆகிறது. ஆனால் இன்னும் ஒப்புதல் வரவில்லை.

மத்திய அரசு ஜனாதிபதியின் ஒப்புதலின்றி பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இதுதொடர்பாக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அவர்கள் இதுதொடர்பாக பதில்கூட கொடுக்கவில்லை. இவ்வாறு நாராயணசாமி பேசினார். 

மேலும் செய்திகள்