அழகுப் போட்டியில் வென்ற டாக்டர்

இந்தியாவில் வாழும் அழகான குடும்பத்தலைவிகளும், வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களும் பங்குபெற்ற ‘மிஸஸ் இந்தியா’ என்ற மாபெரும் அழகிப்போட்டி டெல்லியில் நடந்தது.

Update: 2017-11-19 06:12 GMT
ந்தியாவில் வாழும் அழகான குடும்பத்தலைவிகளும், வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களும் பங்குபெற்ற ‘மிஸஸ் இந்தியா’ என்ற மாபெரும் அழகிப்போட்டி டெல்லியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார், கோவையை சேர்ந்த டாக்டர் காயத்ரி நடராஜன். இவர் பல் மருத்துவர். வயது 31. இவரது கணவர் ராம்குமார் ராமகிருஷ்ணன் விமானியாக பணிபுரிகிறார். பரபரப்பாக நடந்த ‘மிஸஸ் இந்தியா’ அழகுப் போட்டியில் வெற்றிவாகை சூடிய டாக்டர் காயத்ரி அடுத்து லண்டனில் நடைபெறும் சர்வதேச திருமதி அழகிப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த போட்டியில் டெல்லியை சேர்ந்த சுவேதா முதலிடத்தை பிடித்திருக்கிறார். அழகுப் போட்டி வெற்றி மூலம் புகழ் பெற்றிருக்கும் டாக்டர் காயத்ரி நடராஜன், இந்திய அளவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான சிறப்பு தூதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

`மிஸஸ் இந்தியா' போட்டியில் வென்ற டாக்டர் காயத்ரியிடம் பேசுவோம்..

பல் மருத்துவரான நீங்கள் அழகிப்போட்டி மீது ஆர்வம்காட்ட அடிப்படை காரணம் என்ன?

நான் பள்ளி, கல்லூரி படிப்புகளில் முதல் ரேங்க் மாணவி. பாட்டு, பரதநாட்டியம், வீணை போன்றவைகளை முறைப்படி கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறேன். கோவில்களில் பாட்டு, வீணை கச்சேரிகளும் நடத்தி வருகின்றேன். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 3 முறை தங்கம் வென்றிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே இந்த திறமைகள் எல்லாம் வளர என் பெற்றோர் காரணமாக இருந்தனர். பின்பு தகுதி அடிப்படையில் பல்மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து பல் டாக்டராகி 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றேன். பல் மருத்துவம் எனது தொழில் என்றாலும், நான் பயின்ற கலைகள் எனக்கு உயிராக இருந்து வருகின்றன.

எனக்குள்ளே சின்ன வயதில் இருந்தே ஒரு ஏக்கம் உண்டு. அந்த ஏக்கம் நான் மாநிறமாக பிறந்ததுதான். நான் இந்த நிறம் குறித்து அடிக்கடி குறைபட்டு அம்மாவிடம் சொல்வதுண்டு. ஆனால் எனது அம்மா, ‘நிறத்தை பார்க்காதே, உனக்குள்ளே திறமையை வளர்த்துக்கொள்ள பார்’ என்றார். அவர் சொன்னபடி, ‘நிறம் ஒருபொருட்டில்லை என்பதை நிரூபிக்கவேண்டும். எனது சாதனை மூலம் மாநிற பெண்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும்’ என்று திட்டமிட்டு அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது தான் அழகிப்போட்டியை பற்றிய தகவல் கிடைத்தது. பங்கேற்று, என் திறமையைக்காட்டி வென்றேன். பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 52 பெண்கள் கலந்து கொண்டபோதும், தமிழ்நாட்டில் இருந்து நான் மட்டும் கலந்து கொண்டு வெற்றிபெற்றதை தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

அழகிப் போட்டியில் உங்கள் திறமைகளை எப்படி எல்லாம் நிரூபித்தீர்கள்?

போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 10 சுற்றுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் நடனத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்தும் சுற்றில் நான், வரதட்சணை கொடுமையை சித்தரிக்கும் வகையில் பரதநாட்டியம் ஆடினேன். அது அனைவரையும் கவர்ந்தது. இறகுகளை வைத்துக்கொண்டு ஆடும் சுற்றில் நான் மயில்போன்று இறகுகளை அணிந்து ஆடினேன். அதிலும் எனக்கு அதிக மதிப்பெண் கிடைத்தது. அடுத்து வண்ணப்பூக்கள் தோற்றத்திலான ஆடைகளை அணிந்து நீச்சல் குளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தேன். அதிலும் பாராட்டுகளை பெற்றேன். பின்பு சானியா மிர்சா போன்று விளையாட்டு உடையில் தோன்றி நடந்தேன். வேலைக்காக ஒரு நிறுவனத்துக்கு நேர்முக தேர்வுக்கு சென்று, அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு திறமையாக பதில் அளிக்கும் சுற்றிலும் அதிக மதிப்பெண் பெற்றேன். பொது அறிவு சம்பந்தமாக என்னிடம் 10 கேள்விகள் கேட்டனர். அனைத்து கேள்விக்கும் சரியாக பதில் அளித்தேன். இவைகளே எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தன. இந்த அழகுப் போட்டியை அடிவா இன்னவேஷன் என்ற அமைப்பு நடத்தியது.

புற்றுநோய் விழிப்புணர்வு தூதராகும் வாய்ப்பு கிடைக்க என்ன காரணம்?

எனது அம்மா விஜயலட்சுமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் அவர் அனுபவித்த வேதனையை நான் அவரது அருகில் இருந்து பார்த்தேன். அடையார் புற்றுநோய் மருத்துவமனை, பெங்களூரு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்தபோது அவருடன் இருந்து கவனித்தேன். கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகள் ரொம்ப கஷ்டப்படுத்தின. அம்மாவுக்கு ஏற்பட்ட அந்த நோய் எனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நோயாளிகளுக்கு தாங்கள் இறந்து விடுவோமோ என்ற எண்ணம் வந்துவிடும். அந்த கவலையைப் போக்க மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு பாலியோடெக்கேர் என்கிற தெரபியை நாங்கள் நேரடியாக சென்று கொடுத்து வருகின்றோம். இந்த தெரபி மனோரீதியாக அவர்களை பலப்படுத்தும். நீண்ட காலம் வாழலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும்.

நான் அழகியாக தேர்வு பெற்றதும், புற்றுநோய்க்காக நான் செய்யும் சேவையை கருத்தில்கொண்டு, போட்டியை நடத்திய அமைப்பு என்னை இந்தியாவில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளது. நான் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாநிற பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் முடிவு செய்து எனது சேவை பயணத்தை தொடர்கிறேன். வேறு சில அமைப்புகளிலும் நான் விழிப்புணர்வு தூதராக செயல்படுகிறேன்.

சிவப்பு நிற பெண்களுக்கு மத்தியில் மாநிற பெண்ணாக நீங்கள் அழகுப் போட்டியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

அழகிப்போட்டிக்கு நிறத்தைவிட அறிவுத்திறன், பண்புத்திறன்தான் முக்கியம். பொதுவாக அழகிப்போட்டிகளில் உங்களை கவர்ந்த அழகி யார்? என்று கேள்வி கேட்டால், அன்னை தெரசா என்று பதிலளிப்பார்கள். என்னிடம் அந்த கேள்வியை கேட்டபோது இதயபூர்வமாக பதில்சொன்னேன். ‘அன்னை தெரசா சிரிக்கும்போது அவர் முகத்தில் விழும் கோடுகள்தான் அழகு’ என்று நான் சொன்னேன். எனக்கு ஆங்கிலம், தமிழ் தெரியும். இந்தி தெரியாது. இருந்தாலும் தமிழ் எனக்கு தன்னம்பிக்கையை தந்தது. போட்டி யில் பங்கேற்றவர்களில் மாநிறமாக இருந்த ஒரே பெண் நான்தான். இருந்தாலும் நிறம் முக்கியமல்ல. தன்னம்பிக்கையான எனது எண்ணமும், தேடல்களும்தான் என்னை வெற்றிபெறவைத்தது. நான் அதே அழகிப்போட்டியில் `பேஸ் ஆப் சவுத் இந்தியா', `பெஸ்ட் கேட் வாக்' ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளேன்.

திருமணத்துக்கு பிறகு கணவர் கொடுக்கும் ஊக்கம் பெண்ணை உச்சத்துக்கு கொண்டு செல்ல உதவும். அந்த வகையில் எனது கணவர்தான் எனது வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் காரணம். கறுப்பாக இருக்கிற பெண்கள் வாழ்க்கையில் வெறுப்படைந்துவிடக்கூடாது. அவர்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. அவர்களும் உயர்வானவர்கள்தான். அவர்களும் அழகானவர்கள்தான். நான் கலைகளையும், மருத்துவ தொழிலையும் இரு கண்களாகக் கொண்டு செயல்படுகிறேன். எனது மாமியார் டாக்டர் ராஜகுமாரி சமூக சேவையில் சிறந்து விளங்கியவர். எனது தாயாரும் சமூக அக்கறைகொண்டவர். அவர்கள் பெயரில் அறக்கட்டளை அமைத்து சேவைகளை தொடர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளேன்.

சேவை எண்ணம்கொண்ட இவரை வாழ்த்துவோம்! 

மேலும் செய்திகள்