‘சிறுமி கற்பழித்து கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்

மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என்று அகமத்நகர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-11-18 22:33 GMT
அகமத்நகர்,

மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை 13-ந் தேதி, அதே பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களால், கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப்பட்டாள். இந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. சிறுமியை கற்பழித்து கொன்ற ஜித்தேந்திர பாபுலால் ஷிண்டே, சந்தோஷ் கோரக் பாவல் மற்றும் நிதின் கோபிநாத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து, சிறுமி சார்ந்த சமூகத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. இதனால், இந்த சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுவர்ணா கெவாலே நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது, 3 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆனதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

குற்றவாளிகள் 3 பேருக்கும் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்