மதுரவாயலில், கூவம் ஆற்றங்கரையில் இருந்த 130 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

மதுரவாயலில், கூவம் ஆற்றங்கரையில் இருந்த 130 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2017-11-18 21:55 GMT

பூந்தமல்லி,

சென்னையில் மழைக்காலங்களில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை தவிர்க்கும் வகையிலும், கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் பொருட்டும் சென்னை முழுவதும் கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையான நோட்டீஸ் வழங்கியும், மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அரும்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக நேற்று மதுரவாயல் ஓம்சக்தி நகரில் கூவம் ஆற்றங்கரையோரத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 130 வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11–வது மண்டல உதவி கமி‌ஷனர் விஜயகுமார் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வீடுகளை இழந்தவர்களுக்கு திருமழிசையை அடுத்து உள்ள கூடப்பாக்கம் குடிசைமாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்த வாகனங்களில் பொருட்களை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கும், ரே‌ஷன் கார்டு மாற்றம் செய்வதற்குமான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்