மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-11-18 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளின் தொடக்க விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்று பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி முன்னிலை வகித்தார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக் கான பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் தர்மபுரி மாவட்டம் மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இருகைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் வெங்கடேசன் கலந்து கொண்டு 50 மீட்டர் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கமும், 100 மீட்டர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார். அவருக்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் 19,17,14 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. 50,100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. கை,கால் குறைபாடு, காதுகேளாமை, கண்பார்வை குறைபாடு மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக்கல்விஉதவி திட்ட அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன், பாராஒலிம்பிக் சங்க மாவட்ட தலைவர் சரவணன், தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் இயக்குனர் பால்தேவசகாயம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத், பள்ளி துணைஆய்வாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வருகிற 3-ந்தேதி தர்மபுரியில் நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்