ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை ஏமாற்றி பணம் திருடிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது

ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை ஏமாற்றி பணம் திருடிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது

Update: 2017-11-18 23:00 GMT
மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் கால்கள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார். சம்பவத்தன்று இவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது ஏ.டி.எம். மையம் அருகே நின்ற ஒருவரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து, அதன் ரகசிய எண்ணையும் சொல்லி பணம் எடுக்க கூறியுள்ளார். அந்த நபர் பணத்தை எடுத்து கொடுத்து, வெங்கடாசலத்தின் ஏ.டி.எம். கார்டிற்கு பதிலாக போலி ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் சிறிது நேரத்தில் மொரப்பூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெங்கடாசலத்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்த ரூ.38 ஆயிரத்தை அந்த நபர் எடுத்துள்ளார். பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) வெங்கடாசலத்தின் செல்போனிற்கு வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அந்த நபர், தன்னை ஏமாற்றி பணத்தை திருடியது தெரியவந்தது. இது குறித்து தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரிடம், வெங்கடாசலம் புகார் மனு கொடுத்தார். அவருடைய உத்தரவின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், வெங்கடாசலத்திடம் ஏ.டி.எம். கார்டை திருடி, அவருடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடியது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல் பள்ளப்பட்டியை சேர்ந்த சங்கர் (வயது 32) என்பதும், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று சங்கரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்