ஓசூர் அருகே சாலையில் குட்டிகளுடன் உலா வந்த 40 யானைகள்

ஓசூர் அருகே குட்டிகளுடன் உலா வந்த 40 யானைகள் சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.;

Update: 2017-11-18 23:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. ஆண்டுதோறும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியையொட்டி உள்ள கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா காட்டில் இருந்து, 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வருகின்றன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரும் இந்த யானைகள் சுமார் 4 மாதங்கள் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனப்பகுதிகளில் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தளி அருகே ராகி பயிர்களை நாசம் செய்ய வந்த ஒரு யானை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே ஒரு காட்டு யானை, 3 வனத்துறையினர் உள்பட 4 பேரை தாக்கியது. ஒரு மாட்டையும் தந்தத்தால் குத்தி வீசியது.

இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 40 யானைகள், ஊடேதுர்க்கம், சினிகிரிப்பள்ளி, பென்னிக்கல் வனப்பகுதி வழியாக ஓசூர் அருகே உள்ள சானமாவு காட்டிற்கு நேற்று முன்தினம் வந்தன. இந்த 40 யானைகளில் 2 மாத குட்டி யானை, 3 வயது குட்டி யானை உள்ளிட்டவை உள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் மாலை ராயக்கோட்டை சாலையில் உலா வந்தன. பின்னர் அருகில் உள்ள போடூர்பள்ளம் காட்டிற்கு வந்தன.

அந்த யானைகள் இரவு அருகில் உள்ள போடூர் கிராமத்திற்கு சென்றன. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த 5 ஏக்கர் ராகி பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. பின்னர் நேற்று காலை அந்த 40 யானைகளும் போடூர்பள்ளம் காட்டிற்கு திரும்ப சென்றன. இந்த நிலையில் நேற்று பிற்பகல் அந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டினார்கள். இதையடுத்து 40 யானைகளும் ஓசூர்-ராயக்கோட்டை சாலையை கடந்து, சானமாவு காட்டிற்கு வந்தன.

இதன் காரணமாக ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குட்டிகளுடன் யானைகள் சாலையை கடந்ததை கண்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள இந்த 40 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த பகுதிக்கு யானைகள் வரும் முன்பாக அவற்றை விரட்டிட வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்