கல்லாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 12 பேர் கைது டிராக்டர், 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

வேப்பந்தட்டை அருகே கல்லாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து, டிராக்டர், 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-11-18 22:15 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) நல்லுசாமி, வி.களத்தூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கல்லாற்றில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளை கொண்டு மணல் கடத்தப்படுவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிம்பலூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 47), அவரது மகன் ஆனந்த் (25) ஆகியோர் கல்லாற்றில் டிராக்டர் வைத்து மணல் கடத்தியதும், மேலும் அவர்களுக்கு உடந்தையாக பிம்பலூரை சேர்ந்த பெரியசாமி(35), வி.களத்தூரை சேர்ந்த பிரகாஷ் (32), என்.புதூரை சேர்ந்த யாசின் (27), சதீஷ் (25), சிவா (30), சதீஷ்குமார் (32) ஆகியோர் செயல் பட்டதும் தெரியவந்தது.

12 பேர் கைது

இதேபோல் கல்லாற்றில் மாட்டு வண்டிகளை வைத்து பிம்பலூரை சேர்ந்த சின்னதுரை (40), பிச்சைமணி (45) ஆகியோர் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறுமுகம் உள்பட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் 2 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் குன்னம் வட்டம், லெப்பைக்குடிக்காட்டில் நேற்று அதிகாலை மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லெப்பைக்குடிக்காடு வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்த லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்த மாரிமுத்து (45), கண்ணன் (35) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மாரிமுத்து, கண்ணன் இருவரையும் கைது செய்து, 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்