நாமக்கல் பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு

நாமக்கல் பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Update: 2017-11-18 22:45 GMT

நாமக்கல்,

நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சியின் கட்டிடத்தில் 120–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில் செல்போன் கடை, டீக்கடை, பேக்கரிகள், எழுதுபொருட்கள் அங்காடி உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்த சில கட்டிட விபத்துகளின் எதிரொலியாக பல்வேறு இடங்களில் உள்ள அரசு கட்டிடங்களின் உறுதித்தன்மை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. இந்த ஆய்வினை நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் பார்வையிட்டார். இந்த ஆய்வு காலை தொடங்கி மதியம் வரை நீடித்தது.

ஆய்வில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த கட்டிட துறை இணை பேராசிரியர் ராஜ்குமார், உதவி பேராசிரியர்கள் அன்பரசு, அருண்குமார் ஆகியோரை உள்ளடக்கிய அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டிடங்களின் சுவர்களில் நவீன கருவிகளை வைத்து அதன் உறுதித்தன்மையை அதிகாரிகள் பரிசோதித்தனர். இந்த ஆய்வு சேதமற்ற ஆய்வு முறையில் நடந்தது. மேலும் உறுதித்தன்மைக்கான அளவீடுகளை குறிப்பெடுத்த ஆய்வு குழுவினர், அதனை நகராட்சி நிர்வாகத்திடம் வழங்க உள்ளதாக கூறினர்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் கட்டிடங்களை உறுதியை தெரிந்து கொள்ள நகராட்சி நிர்வாகத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எனவும், வழக்கமான ஆய்வுதான் எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்