சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பேட்டி

புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு முழு ஆதரவு அளித்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-18 23:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறோம். இதில் நடந்து ரோந்து செல்வது, சைக்கிளில் ரோந்து செல்வது, மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்வது, இரவில் ரோந்து செல்வது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருவதால் குற்றங்கள் தடுக்கப்படுகிறது.

மேலும் புன்னகை திட்டம் மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுவர்கள், சிறு, சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்து வருகிறோம். கொடுமையான குற்றங்களை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்து வருகிறோம். இதுவரை 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் அனைவரும் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் புதுச்சேரி அரசின் முழு ஆதரவும் அளித்து வருகிறது. காவல் துறையில் இருந்து கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பணி நீக்கம், இடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்