ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயற்சி

ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.

Update: 2017-11-18 22:45 GMT

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கடந்த 10 நாட்களாக குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஸ்ரீமுஷ்ணம் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் நேற்று முன்தினம் முதல் மணல் குவாரி வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.

இதையடுத்து நேற்று காலை குவாரியில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு 100–க்கும் மேற்பட்ட லாரிகள் பூண்டி கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்த முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேச்சுவார்த்தையை ஏற்காததால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே திடீரென தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் இதுகுறித்து அறிந்து வந்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிட்டிபாபு, இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீமுஷ்ணம் தனசேகரன், சேத்தியாத்தோப்பு வீரமணி, குமராட்சி செபாஸ்டின் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மணல் குவாரி அமைக்கும்போதே கள்ளிப்பாடி ஊராட்சி மற்றும் அதனை சார்ந்த குக்கிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழா நடத்துவதற்காக மணல் லாரி டிரைவர்களிடம் நன்கொடை வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த பணம் வசூலிக்கும் பணியை கள்ளிப்பாடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு வசூலாகும் தொகையை கள்ளிப்பாடி, பூண்டி உள்பட 4 கிராமங்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பேசி முடிவு செய்திருந்தோம்.

ஆனால் இதுவரை வசூலான தொகையில் குறைந்த அளவு மட்டுமே பூண்டி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி கேட்டால் கள்ளிப்பாடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் சரியாக பதில் அளிப்பதில்லை. தற்போது எங்களது கிராம பகுதியில்தான் மணல் அள்ளப்படுகிறது. எனவே இந்த வழியாக மணல் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்களிடம் நன்கொடை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், மணல் லாரி டிரைவர்களிடம் கிராம மக்கள் நன்கொடை வசூலிக்க கூடாது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்த முயற்சி செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே போராட்டம் நடத்த முயற்சி செய்வதை கைவிடுங்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் பிடித்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்