பழனியில் நகைக்கடைகளில் விடிய, விடிய நடந்த வருமான வரி சோதனை

பழனியில், நகைக்கடைகளில் விடிய, விடிய நடந்த வருமான வரி சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Update: 2017-11-18 22:45 GMT

பழனி,

‘ஆபரே‌ஷன் கிளீன் மணி’ என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 9–ந்தேதி, 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி காட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம் பழனி ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீகற்பகம் ஜூவல்லரி, பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் இருக்கும் நியூ கற்பகம் ஜூவல்லரி ஆகிய நகைக்கடைகளுக்கு 3 கார்களில் 15–க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் மதியம் வந்தனர்.

அவர்கள் வருமான வரி துணை கமி‌ஷனர் ரூபா வினய் தலைமையில் இரண்டு குழுவாக பிரிந்து 2 நகைக்கடைகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அன்றைய தினம் நள்ளிரவுக்கு பிறகும் சோதனை தொடர்ந்தது. முன்னதாக இரவு 10.30 மணி அளவில் அந்த நகைக்கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரண்டு நகைக்கடைகளிலும் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர்.

இந்த அதிரடி சோதனை விடிய, விடிய நீடித்தது. நேற்று காலை 8.30 மணிக்கு சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை பைகளில் வைத்து வருமான வரித்துறையினர் எடுத்து சென்றனர்.

‘பில்’ இன்றி நகைகளை விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக தெரியவந்து உள்ளது. விடிய, விடிய நீடித்த சோதனை பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்