தமிழகத்தில் முதல் முறையாக தேனியில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலாகிறது

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக தேனி மாவட்டத்தில் அமலாக உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

Update: 2017-11-18 22:00 GMT

தேனி,

ஆதரவற்ற முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் தபால் துறை வழியாக உதவித்தொகை பணம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், வங்கிகள் மூலம் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு முதியோர் உதவித்தொகையை வங்கிகள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன. மேலும், கோர் பேங்கிங் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அரசும், கூட்டுறவுத்துறையை புதுப்பிக்கவும், புதிய திட்டங்களை அறிமுகம் செய்யவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதையடுத்து, முதியோர் உதவித்தொகையை வரும் காலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:–

முதியோர் உதவித்தொகை தற்போது வங்கிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வங்கிகள் போன்று செயல்படும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், உதவித்தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக தேனி மாவட்டத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 10 கூட்டுறவு கடன் சங்கங்களில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அந்தந்த சங்கங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள், கிராமப்புற பகுதிகளில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்த நடைமுறையை முதற்கட்டமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்