ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்தது மனவேதனை அளிக்கிறது; எடப்பாடி பழனிசாமி
சில பேர் செய்த தவறுகளால் ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்தது மனவேதனை அளிக்கிறது என்று மதுரையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை,
சிவகங்கையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் மதுரை விமான நிலையத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், முதல்–அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு–
கேள்வி: கவர்னரின் ஆய்வை தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: இதில் ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பது எல்லாம் கிடையாது. கவர்னர் ஆய்வு என்று சொல்வதே தவறு. அவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அரசு என்ன திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது என்று தெரிந்து கொண்டு இருக்கிறார்.
கேள்வி:– அப்படியென்றால் இந்த ஆய்வை நீங்கள் வரவேற்கிறீர்களா?
பதில்: ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் போகிறார். அங்கு செல்லும் போது ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது அரசின் நல்ல பல திட்டங்களை தெரிந்து கொண்டு இருக்கிறார். அவரே மிக அழகாக சொல்லி இருக்கிறார். மாநில அரசு மிக சிறப்பாக, தெளிவாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார். அதனை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்ற குறையாக திட்டமிட்டு சொல்கிறார்கள்.
கேள்வி:– ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வருகிறதே. அதில் அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியும். யாரால் இந்த சோதனை நடைபெற்றது என்று. வருமான வரித்துறை, வரி ஏய்ப்பவர்கள் மீது சோதனை செய்கிறது. அந்தஅடிப்படையில் தான் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடைபெற்று இருக்கிறது.
கேள்வி: ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்ததற்கு உள்நோக்கம் இருப்பதாக டி.டி.வி.தினகரன் சொல்கிறாரே?
பதில்: அதில் எப்படி உள்நோக்கம் இருக்க முடியும்? வருமான வரித்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவது இல்லை. யாராக இருந்தாலும் சரி, தொழில் அதிபர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் சரி, வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது வருமான வரி சோதனை நடத்துவது வழக்கம். அந்த அடிப்படையிலேயே சின்னம்மா குடும்பத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் இல்லங்களில் சோதனை நடந்ததை பத்திரிகைகள் வழியாக நான் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற ஆணையை பெற்று ஜெயலலிதா வசித்த இல்லத்தில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதில் ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடைபெற வில்லை. இந்த சோதனை தேவையில்லாமல் சில பேர்கள் செய்த தவறின் காரணமாக நடந்து இருக்கிறது. அது எங்களைப் போன்ற அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மன வேதனை அளிக்கிறது. சில பேர் செய்த தவறுகள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இந்த சோதனை யாரால் நடக்கிறது என்று. ஆனால் நீங்கள் கேள்வி கேட்டு என்னை மடக்கப் பார்க்கிறீர்கள்.
கேள்வி: இந்த சோதனையால் மனவேதனை அடைந்தீர்களா?
பதில்: ஆமாம். சில பேரின் தவறால் இந்த சோதனை நடந்துள்ளது. 1 கோடி அ.தி.மு.க. தொண்டர்களும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால் தான் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேள்வி:– கடந்த காலங்களில் நடந்த வருமான வரி சோதனையில் எல்லாம் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது?
பதில்:– அவர்கள் என்ன சோதனை செய்தார்கள் என்பது எல்லாம் யாருக்கும் தெரியாது. வருமான வரித்துறை தான் சோதனை செய்துள்ளது. யாரிடம் சோதனை செய்தார்கள் என்பது தெரியாது. மாநில அரசுக்கும் வருமானவரித்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கேள்வி: டி.டி.வி.தினகரன் உங்களை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?
பதில்:– டி.டி.வி.தினகரன் யார்? ஊடகங்கள் தான் அவரை பெரிதுபடுத்துகின்றன. 10 ஆண்டுகளாக அவர் கட்சியிலேயே இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தான் அவர் கட்சிக்கு வருகிறார். அவருக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் எல்லாம் அப்படியல்ல. நான் 1974–வது ஆண்டு முதல் இந்த கட்சியில் உள்ளேன். சோதனையான காலத்திலும் கட்சியுடன் இருந்திருக்கிறேன். பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கட்சிக்கும், ஆட்சிக்கும் எப்போதும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். அந்த காரணத்தால் தான் இன்று இந்த பதவிக்கு உயர்ந்து வந்திருக்கிறேன். உழைத்து தான் வந்திருக்கிறேன். பல்வேறு போராட்டங்களை சந்தித்து 6 முறை சிறை சென்று இருக்கிறேன். தினகரன் எத்தனை முறை சிறை சென்று இருக்கிறார்? கட்சிக்காக தினகரன் செய்த தியாகம் என்ன? அவர் என்ன சேவை செய்தார். இந்த கட்சிக்கு? ஊடகங்கள் பரபரப்பு செய்திக்காக தினமும் தினகரனிடம் பேட்டி எடுத்துப் போடுகிறார்கள்.
கேள்வி:– நாங்கள் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சராக்கினோம் என்று டி.டி.வி.தினகரன் கூறுகிறாரே?
பதில்:– இவர் தான் 10 ஆண்டுகளாக கட்சியிலேயே இல்லையே. பின்பு எப்படி அவர் என்னை முதல்–அமைச்சராக்க முடியும்? அ.தி.மு.க. சார்பில் பல முறை எம்.எல்.ஏ.க்கு போட்டியிட்டுள்ளேன். வெற்றியும், தோல்வியும் பெற்றுள்ளேன். அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை ஜெயலலிதா எனக்கு வழங்கியிருக்கிறார். 2011–ம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தேன். நான் சிறப்பாக செயல்பட்டதால் கூடுதலாக பொதுப்பணித்துறை பொறுப்பும் எனக்கு ஜெயலலிதா வழங்கினார். 1991–ம் ஆண்டிலேயே மாவட்ட செயலாளராக பதவி வகித்து இருக்கிறேன். படிப்படியாக கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறேன். இந்த பதவிகள் அனைத்தும் ஜெயலலிதாவால் எனக்கு வழங்கப்பட்டவை. நான் வேறு யாருடைய தயவிலும் எந்த பொறுப்புக்கும் வரவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்கள் தான் என்னை முதல்–அமைச்சராக தேர்ந்தெடுத்தனர். டி.டி.வி.தினகரன் தேர்ந்தெடுத்திருந்தால் இப்போது அவர்கள் பக்கம் தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இருந்திருக்க வேண்டும் அல்லவா?
கேள்வி:– தேவையான நேரத்தில் சிலீப்பர்செல் எம்.எல்.ஏ.க்கள் வெளியில் வருவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறுகிறாரே?
பதில்:–அது தான் நான் சொல்கிறேன். நீங்கள் டி.டி.வி.தினகரனை பெரிய அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டு தினந்தோறும் பேட்டி எடுத்து பரபரப்பு செய்தி வெளியிடுகிறீர்கள்.
கேள்வி:– 10 ஆண்டுகள் கட்சியில் இல்லாத தினகரன், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட ஏன் ஆதரவு அளித்தீர்களே?
பதில்:– நாங்கள் அவரை அறிவிக்கவில்லை. நான் சேலத்தில் இருந்தபோது அவராகவே ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துக்கொண்டார். அதன்பின் கட்சியில் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் எல்லோரும் பேசி முடிவு செய்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியதாகி விட்டது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.