இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2017-11-18 22:00 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). பெயிண்டர். இவர் நேற்று வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது அவரது அண்ணன் சேட்டுவின் மகன்கள் சுபாஷ் (13), வல்லரசு (11) ஆகியோர் தங்களை படப்பை அரசு பள்ளியில் விடுமாறு கேட்டு கொண்டனர். வெங்கடேசனும் அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார். ஓரகடம்–படப்பை சாலையில் காரணிதாங்கல் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி வெங்கடேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த சுபாஷ், வல்லரசு இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த சுபாஷ் (13), வல்லரசு இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான வெங்கடேசனின் உடல் பிரேத பரிசசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கல்பாக்கத்தை அடுத்த அடையாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (47). மதுராந்தகம் பகுதியில் சீட் கவர் செய்யும் கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் கூவத்தூர்– மதுராந்தகம் சாலையில் வந்து கொண்டிருந்தார். பவுஞ்சூரை அடுத்த நெற்குணப்பட்டு கிராமத்தில் வரும்போது சாலையோரம் பழுதாகி நின்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக உதயகுமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்த அடையாளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்