கர்நாடகத்தில் மின்வெட்டு அமல்? சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்

கர்நாடகத்தில் மின்வெட் அமல்படுத்தபடுமா? என்பதற்கு சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் பதில் அளித்து உள்ளார்.

Update: 2017-11-18 00:11 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் மகாலிங்கப்பா கேட்ட கேள்விக்கு மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாய பம்புசெட்டுகளுக்கு தினமும் 7 மணி நேரம் இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு அரசு, மானியமாக ஆண்டுக்கு ரூ.9,400 கோடி வழங்குகிறது. தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக வறட்சி இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு தடை இன்றி மின்சாரம் வழங்கி இருக்கிறோம். விவசாயிகளுக்கு பகலில் மின்சாரம் வினியோகம் செய்ய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

பெலகாவி மாவட்டம் ராயபாக் தாலுகாவில் 440 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 1,050 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் தயாராக உள்ளது. இதன் தொடக்க விழா விரைவில் நடத்தப்படும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அழைப்பு விடுக்கப்படும்.

தாலுகாக்களில் 1,200 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக 60 தாலுகாக்களில் இந்த கட்டமைப்புகளை அமைக்க டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 43 தாலுகாக்களில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தி மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் 48 பைசா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சூரியசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வந்தால், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்த மாட்டோம். நிலக்கரி பற்றாக்குறையாக இருந்தாலும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்