மடிக்கணினி கொள்முதல் முறைகேடு குறித்து சட்டசபை கூட்டு குழு விசாரணை

மடிக்கணினி கொள்முதலில் நடந்த முறைகேடு புகார் குறித்து சட்டசபை கூட்டு குழு விசாரணை நடத்தப்படும் என்று மேலவை தலைவர் சங்கரமூர்த்தி அறிவித்தார்.

Update: 2017-11-18 00:08 GMT

பெங்களூரு,

கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் ரகுநாத்ராவ் மல்காபுரே, மடிக்கணினி கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறி பிரச்சினை கிளப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை மந்திரி பசவராஜ் ராயரெட்டி, “கல்லூரி கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை மூலமாக மாணவ–மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை. நடப்பு ஆண்டில் மடிக்கணினி வழங்க இன்னும் டெண்டருக்கே அழைப்பு விடுக்கவில்லை. அதனால் முறைகேடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை“ என்றார்.

அப்போது பேசிய ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ரமேஷ்பாபு, “கடந்த ஆண்டு டெண்டருக்கு அழைத்து மடிக்கணினிகள் விநியோகம் செய்வதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளது“ என்றார். ரமேஷ்பாபுவின் இந்த கருத்துக்கு ஆதரவாக பேசிய பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள் எழுந்து, மடிக்கணினி கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு குறித்து சட்டசபை கூட்டு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த மந்திரி பசவராஜ் ராயரெட்டி, “மடிக்கணினி கொள்முதலில் முறைகேடு நடந்திருந்தால் மந்திரி பதவியில் ஒரு நிமிடம் கூட நீடிக்க மாட்டேன். பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிடுவேன்“ என்றார். அப்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டு குழு அமைக்க வேண்டும் வலியுறுத்தினர். இதற்கு தனது எதிர்ப்பு இல்லை என்று மந்திரி பசவராஜ் ராயரெட்டி கூறினார். இதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். அவை முன்னவரும், மந்திரியுமான சீதாராமும் இதை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து மேலவை தலைவர் தலைவர் சங்கரமூர்த்தி, “மடிக்கணினி கொள்முதலில் முறைகேடு புகார் குறித்து சட்டசபை கூட்டு குழு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு இன்று(நேற்று) மாலைக்குள் அமைக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி அடுத்த 15 நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று அறிவித்தார்.

மேலும் செய்திகள்