கார்த்திகை முதல் நாளையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை

கார்த்திகை முதல் நாளையொட்டி, சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் நேற்று விரதம் தொடங்கினார்கள்.;

Update: 2017-11-17 23:43 GMT
சேலம்,

ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை 1-ந் தேதியன்று துளசி மாலை அல்லது ருத்ராட்சை மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். அதன்படி, நேற்று கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால் சேலம் மாநகரில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில், சேலம் டவுன் ராஜகணபதி கோவில், சேலம்-பெங்களூரு ரோட்டில் உள்ள சாஸ்தாநகர் அய்யப்பா ஆஸ்ரமம், சேலம் டவுன் ரெயில்வே நிலையம் அருகில் உள்ள அய்யப்பன் பஜனை மண்டலி ஸ்ரீதர்மசாஸ்தா ஆஸ்ரமம் மற்றும் முருகன் கோவில்களுக்கு சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் புனித நீராடிவிட்டு வந்தனர்.

இதையடுத்து பக்தர்கள் துளசிமாலை அல்லது ருத்ராட்சை மாலையை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குருசாமி மூலமாகவும், குருசாமி இல்லாதவர்கள் அர்ச்சனை செய்தும் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். விரத நாட்களில் காலை, மாலை இருவேளைகளில் பக்தர்கள் புனித நீராடி அய்யப்பனை 108 சரணங்கள் சொல்லி வணங்க வேண்டும்.

இவர்கள் காவி, நீலம், கறுப்பு நிற ஆடைகளை அணிவார்கள். முகச்சவரம் செய்வது மற்றும் செருப்பு அணிவதையும் தவிர்ப்பார்கள். புகை பிடிப்பது, மது அருந்துவது, மாமிச உணவு சாப்பிடுவதையும் தவிர்த்து விரதம் கடைப்பிடிப்பார்கள்.

சேலம் டவுன் ரெயில்வே நிலையம் அருகில் உள்ள அய்யப்பன் பஜனை மண்டலி ஸ்ரீ தர்மசாஸ்தா ஆஸ்ரமத்தில் மண்டல பூஜை தொடங்கியது. இது டிசம்பர் மாதம் 27-ந் தேதிவரை நடக்கிறது. நேற்று மாலை இரவு 7.30 மணிக்கு படிபூஜை நடந்தது. இதில் திரளான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் ஜனவரி 14-ந் தேதிவரை விரதம் மேற்கொள்பவர்கள் 18-ம் படி வழியாக தரிசனமும் நடக்கிறது. ஜனவரி 14-ந் தேதி (தை 1-ந் தேதி) லட்சதீப மகர விளக்கு பூஜை நடக்கிறது.

சேலம்-பெங்களூரு ரோட்டில் உள்ள சாஸ்தாநகர் அய்யப்பா ஆஸ்ரமத்தில் நேற்று முதல் மண்டல பூஜை ஆரம்பித்தது. தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறுகிறது. அதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. திரளான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். காலை 10 மணிக்கு உஷபூஜை, நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை நடந்தது. டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. டிசம்பர் 28-ந் தேதி முதல் மகரவிளக்கு பூஜை தொடங்குகிறது.

சேலம் அருகே உள்ள கஞ்சமலை சித்தர் கோவிலில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வேட்டி, துண்டு, துளசி மாலை ஆகியவற்றை பசும் பாலில் நனைத்தனர். இதையடுத்து, பக்தர்கள் கோவில் ஊற்று ஆரம்பிக்கும் இடத்திலும், அங்கு உள்ள புனித தீர்த்த குளத்திலும் குளித்தனர்.

பின்னர் அரசமரத்து பிள்ளையார் கோவிலில் வணங்கி பூசாரி மற்றும் அந்தந்த பகுதி குருசாமிகள் துணையுடன் மாலை அணிந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கஞ்சமலை சித்தர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்