மனைவியை போலீசார் கைது செய்ததால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணியில் மனைவியை போலீசார் கைது செய்ததால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-17 23:33 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி தெலுங்கு காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). லாரி டிரைவர். இவருக்கு மகிளா (34) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பக்கத்து வீட்டில் ரமேஷின் தங்கை அனுராதா (35) என்பவர் வசித்து வருகிறார். வீட்டில் உள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மகிளாவுக்கும், அனுராதாவுக்கும் இடையே கடந்த 15-ந் தேதி தகராறு ஏற்பட்டது.

இதனை அறிந்த ரமேஷ், தனது மனைவியை சமாதானம் செய்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து மகிளா, தனது சகோதரர் தனஞ்செழியன் (40), தாயார் செஞ்சம்மாள் (60), சகோதரி கலா (38) ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மகிளா தனது தாயார் மற்றும் சகோதரர், சகோதரியை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் அனுராதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில் அனுராதாவை மகிளாவின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அனுராதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுராதாவை அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அனுராதா அளித்த புகாரின் பேரில் ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகிளா மற்றும் அவரது உறவினர்கள் தனஞ்செழியன், செஞ்சம்மாள், கலா ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அனைவரையும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் மனைவியை போலீசார் கைது செய்ததால் மனமுடைந்த ரமேஷ் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது மனைவி மகிளா, கோர்ட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ரமேஷ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்