சரக்கு சேவை வரி விதிப்பின் மூலம் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க செய்ய திட்டமிட்டுள்ளோம் தலைமை செயலாளர் அஸ்வனி குமார்

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் மூலம் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று தலைமை செயலாளர் அஸ்வனி குமார் கூறியுள்ளார்.

Update: 2017-11-17 22:00 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகையில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தலைமை செயலாளர் அஸ்வனி குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் பொறுப்பேற்றது முதல் அரசுத் துறைகள் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். குறிப்பாக காவல் துறையில் ஆய்வு செய்த போது பல்வேறு பிரச்சினைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. பதவி உயர்வு விவகாரம் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதை சட்டத்தின்படி அமல்படுத்த வேண்டும்.

குற்றத் தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது. இதற்காக சிறிய மாநிலங்களில் முதலிடத்தை புதுவை பெற்றுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்கள் மறுவாழ்வுக்கு வகை செய்ய வேண்டும். இதற்காக காவல்துறை, தொழிலாளர் துறை, சமூக நலத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும்.

நான் அரசு ஊழியன். சட்டத்தின்படி நான் செயல்பட வேண்டும். கவர்னர், முதல்–அமைச்சர் உள்ளிட்டோருக்கு சரியான அறிவுரையை கூற வேண்டிய கடமை உள்ளது. பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக என்னிடம் கடிதம் தந்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய உள்துறை அறிவிப்பு அனுப்பியுள்ளது. சட்டப்பேரவைத் தலைவரும் தனது நிலையை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் எனது அதிகார வரம்புக்குள் வராது. இதில் நான் எதுவும் செய்வதற்கில்லை.

புதுச்சேரி மாநில நிதிநிலை சிக்கலாக உள்ளது. நிதி மேலாண்மை செய்ய வேண்டியது அவசியமாகும். வருவாயை பெருக்குவதறான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். முன்பு புதுவை மாநிலத்தில் செலவினங்களுக்கு மத்திய அரசு நமக்கு 90 சதவீதம் நிதி தந்தது. மாநில அரசு 10 சதவீத நிதியை ஏற்றுக்கொண்டது. தற்போது நிதிஆயோக்கிடம் இருந்து வந்துள்ள கடிதத்தின்படி மத்திய அரசு 60 சதவீதம் மட்டும்தான் நிதி தரும். மாநில அரசு 40 சதவீத நிதி செலவினத்தை ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நமக்கு சிக்கல் தான் உருவாகும். எனவே பழையபடி 90–10 சதவீத வழிமுறையையே பின்பற்றலாமா என ஆலோசித்து வருகிறோம்.

சரக்கு மற்றும் சேவை வரி வரிவிதிப்பால் புதுவைக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும். எனினும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மூலம் மாநிலத்துக்கு வருவாயை அதிகரிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளோம். நிதி தட்டுப்பாடு உள்ளதால் தான் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. நிதி நிலைமை சீரானால் நலத்திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்