ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரசார் மாட்டு வண்டி ஊர்வலம்

தமிழகத்தில் ரே‌ஷன் சர்க்கரை விலையை உயர்த்தியதை கண்டித்து, நாகர்கோவிலில் காங்கிரசார் மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தினர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

Update: 2017-11-17 22:30 GMT

நாகர்கோவில்,

அத்தியாவசியப் பொருட்களான கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் நேற்று மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் நிர்வாகிகள் அசோகன் சாலமன், அலெக்ஸ், தங்கம்நடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

வேப்பமூடு சந்திப்பில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் கோர்ட்டு ரோடு, டதி பள்ளி சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகம் வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாட்டு வண்டியில் அமர்ந்துகொண்டும், நடந்தும் சென்றனர்.

முன்னதாக அனைவரும் வேப்பமூடு சந்திப்பில் காலியான ஒரு கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஊர்வல முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும், இதுபோல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையையும் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன.

மாட்டு வண்டி ஊர்வலத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊர்வலம் சென்ற வழியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்