3–வது மாடியில் இருந்து இரும்பு கோக்காலி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பெண் தொழிலாளி சாவு
3–வது மாடியில் இருந்து இரும்பு கோக்காலி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பெண் கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேஸ்திரி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருச்சி,
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா நாட்டார்கோவில் பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மூக்காயி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரும், கரூர் குளித்தலை செப்பராக்கல்பட்டியை சேர்ந்த கந்தசாமியின் மனைவி லதா(35), மாணிக்கம் மனைவி முத்து உள்ளிட்ட சிலர் சம்பவத்தன்று திருச்சி தில்லைநகர் 10–வது குறுக்கு தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 3 மாடி கட்டிடத்தில் வேலை பார்த்தனர். இதையடுத்து மாலையில் வேலை முடிந்து மூக்காயி, லதா, முத்து ஆகியோர் கட்டிடத்தின் வெளிப்புறமாக நின்று கொண்டு கட்டிடப்பணிக்கு பயன்படுத்திய பொருட்களை கழுவிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 3–வது மாடியில் இருந்து இரும்பு கோக்காலி ஒன்று திடீரென்று வெளிப்புறம் வழியாக கீழே விழுந்தது.
அந்த கோக்காலி கீழே கட்டிடப்பொருட்களை கழுவிக் கொண்டிருந்த மூக்காயி, லதா, முத்து ஆகியோர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர்களை சக தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூக்காயி நேற்று முன்தினம் இறந்தார். லதா, முத்து ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூக்காயி, லதா, முத்து உள்ளிட்ட வேலைக்கு அழைத்து சென்ற மேஸ்திரி விஸ்வநாதன் மற்றும் 3–வது தளத்தில் கோக்காலியை நகர்த்தி வைத்த தொழிலாளி அமர்நாத் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.