பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

திருவையாறு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2017-11-17 21:45 GMT

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பந்துருத்தி பகுதியை சேர்ந்த 253 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை இது வரை வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து பல முறை தொடக்க வேளாண்மை கடன் சங்கத்துக்கு விவசாயிகள் சென்று கேட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் விரைவில் காப்பீட்டு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். ஆனால் நேற்று வரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

எனவே விவசாயிகள் மேலதிருப்பந்துருத்தி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் விஸ்வஜித்காடேராவ், அகமது மற்றும் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவையாறு தாசில்தார்(பொறுப்பு) நெடுஞ்செழியன், துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், இன்ஸ்பெக்டர் சிவராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெகன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வமணி, செயலாளர் சண்முகம் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 27–ந் தேதிக்குள்(திங்கட்கிழமை) பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்