வாலிபர் குத்திக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

சாத்தான்குளம் அருகே வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2017-11-17 20:45 GMT

தூத்துக்குடி,

சாத்தான்குளம் அருகே வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

முன்விரோதம்

சாத்தான்குளம் ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் கோயில்ராஜ். இவருடைய மகன் பிரவின்குமார்(வயது 20). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து உள்ளார். கடந்த 2014–ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல தேர்தலில் கோயில்ராஜ், பிரவின்குமார் ஆகியோர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனந்தபுரம் கோயில் தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் ஜார்ஜ்(38) என்பவர் மற்றொரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்.

தேர்தலில் கோயில்ராஜ், பிரவின்குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்தவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு ஆனந்தபுரத்தில் உள்ள இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது. அங்கு வந்த பிரவின்குமாருக்கும், ஜார்ஜூக்கும் இடையே திருமண்டல தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் அதிகரித்தது.

குத்திக்கொலை

இதைத் தொடர்ந்து கடந்த 15–5–15 அன்று நடந்த ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வதற்காக கோயில்ராஜ், மனைவி சந்திரா, மகன் பிரவின்குமார் ஆகியோர் ஆலயத்துக்கு சென்றனர். மறுநாள் காலையில் நடைபெறும் ஜெபத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடும்பத்துடன் ஆலயத்தில் தங்கி இருந்தனர். 16–5–15 அன்று அதிகாலையில் பிரவின்குமார், தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஜார்ஜ், உறவினர்கள் ஆனந்தபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் ராஜரத்தினம் என்ற ராயல்(48), ரத்தினம் மகன் ஆல்பர்ட்(36) ஆகியோர் சேர்ந்து பிரவின்குமாரை கத்தியால் குத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க பிரவின்குமார் சாத்தான்குளம்–நாசரேத் ரோட்டில் பழங்குளம் பகுதியில் தப்பி ஓடினார். ஆனால் விடாமல் விரட்டி சென்ற 3 பேரும் சரமாரியாக கத்தியால் அவரை குத்திக்கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ், ராஜரத்தினம் என்ற ராயல், ஆல்பர்ட் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வக்குமார் ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்