நெல்லையில் கைவினை பொருட்கள் கண்காட்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்

நெல்லையில் கைவினை பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

Update: 2017-11-17 21:30 GMT

நெல்லை,

நெல்லையில் கைவினை பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

கண்காட்சி திறப்பு

நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள, மாவட்ட வணிக வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் சார்பில் மாவட்ட வணிக வளாகத்தில் கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினை உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 23 மகளிர் சுயஉதவி குழுக்களும், பிற மாவட்டங்களில் இருந்து 17 மகளிர் சுயஉதவி குழுக்களும் இணைந்து, பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய சுமார் 40 அரங்குகள் அமைத்துள்ளனர்.

பல்வேறு வகையான பொருட்கள்

இந்த அரங்குகளில் கடல் சிப்பி, பனை ஓலை அலங்கார பொருட்கள், கவரிங் நகைகள், தஞ்சாவூர் பைகள், திண்டுக்கல் ‘டெரகோட்டா’, சேலை வகைகள், தூத்துக்குடி மீன் ஊறுகாய், நீலகிரி தைலம், மூலிகை பொருட்கள், வாழைநார் பொருட்கள், கற்றாழை நார் பொருட்கள், பத்தமடை பாய், சுடுமண் பொம்மைகள், கால் மிதியடிகள், பலகாரங்கள், மர சாமான்கள், அழகு ஆபரணங்கள், காட்டன் சேலைகள், நைட்டி வகைகள், பொம்மை வகைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தேவையான பொருட்களை வாங்கி பயன் அடையலாம். இந்த கண்காட்சி வருகிற 27–ந்தேதி வரை நடைபெறுகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் மற்றும் திட்ட அலுவலர் கெட்ஸி லீமா அமலினி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்