அரசு மருத்துவமனையில் குரங்குகள் அட்டகாசத்தால் நோயாளிகள் அவதி
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள், அவசர சிகிச்சை, குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை, இருதயம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, தோல் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மருத்துவமனைக்கு தினமும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். புற நோயாளிகள், உள் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்தக் குரங்குகள் மருத்துவமனைக்கு வருபவர்களை அச்சுறுத்தி வருகின்றன. ஓய்வு அறை, பிரசவ வார்டுகளின் உள்ளேயே குரங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால், பிரசவித்த தாய் மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பீதியில் உள்ளனர். நோயாளிகள், பச்சிளம் குழந்தைகள் சாப்பிடுவதற்காக வைத்திருக்கும் பழங்கள், தின்பண்டங்களை குரங்குகள் தூக்கிக்கொண்டு ஓடி விடுகின்றன. குரங்குகள் குழந்தைகளை கடித்து விடுமோ என அச்சமும் ஏற்படுகிறது. பார்வையாளர்கள் அமரும் இடங்களை குரங்குகள் ஆக்கிரமிக்கின்றன. குரங்குகளால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை விரட்டி அடிக்காமல் அங்கு பணியில் இருக்கும் காவலர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.