நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2017-11-16 23:25 GMT

காலாப்பட்டு,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக மாணவர் வினோத்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் யாரையும் அனுமதிக்கக்கூடாது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழகத்துக்கு சம்பந்தம் இல்லாத எவரையும் அனுமதிக்கக்கூடாது. தேவைப்பட்டால் அத்துமீறி நுழைபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கலாம். பல்கலைக்கழகத்தில் ‘பயோமெட்ரிக்‘ வருகை பதிவேட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உத்தரவிட்டார். அதன்பேரில் காலாப்பட்டு போலீசார், ஐ.ஆர்.பி.என். போலீசார் என 2 பெண் போலீசார் உள்பட மொத்தம் 10 பேர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பல்கலைக்கழகத்தின் 2 நுழைவு வாயில் வழியாக செல்பவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்தே உள்ளே அனுமதித்தனர். அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அடையாள அட்டை கொண்டு வராத மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இருப்பினும் பல்கலைக்கழக உணவகம், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அடையாள அட்டை இல்லாதபோதும், அவர்கள் விசாரணைக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்