பெங்களூருவில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

பெங்களூருவில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள்.

Update: 2017-11-16 23:19 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த மாநில அரசு புதிதாக ஒரு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. அந்த மசோதா பெலகாவியில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு தனியார் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 13–ந் தேதி முதல் டாக்டர்கள் பெலகாவியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுமார் 22 நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் மரணம் அடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் டாக்டர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம் சங்கத்தினர் தங்களின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

பெங்களூருவில் நாளை (அதாவது இன்று) முதல் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பணிக்கு திரும்புகிறார்கள். மேலும் தனியார் மருத்துவமனைகளில் வழக்கும்போல் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயண்ணா அறிவித்துள்ளார். மேலும் பெலகாவியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இருந்து அந்த சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்களும் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள் என்று தகவல் வெளியானது.

மேலும் செய்திகள்