டெங்கு கொசுப்புழு உற்பத்தி: புதிய அடுக்குமாடி கட்டுமான பணிக்கு 15 நாட்கள் தடை விதித்து உத்தரவு

டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருந்ததால் புதிய அடுக்குமாடி கட்டுமான பணிக்கு 15 நாட்கள் தடை விதித்து ஆய்வின்போது கலெக்டர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2017-11-16 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரியமங்கலம் கோட்டம் 27- வது வார்டு செந்தண்ணீர்புரம் சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள தனியார் லாரி நிறுத்தும் இடத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், டயர்களில் டெங்கு கொசு புழுக்கள் அதிக அளவில் இருந்ததை கண்டு பிடித்து பணியாளர்கள் மூலம் அழிக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்நிறுவனம் 2 நாட்களுக்குள் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க தவறினால் பூட்டி சீல் வைக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். இதே லாரி நிறுவனத்துக்கு ஏற்கனவே ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்த போது டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் நிலையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த மாதம் இக்கட்டிட உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பராமரிக்காத நிலை தொடர் வதால் கட்டிட கட்டுமான பணியை 15 நாட்களுக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்