காங்கேயம் அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி

காங்கேயம் அருகே காரும்-மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-16 23:00 GMT
காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சாவடி என்ற ஊரை சேர்ந்தவர் கருப்புசாமி, சமையல் காண்டிராக்டர். இவரது மகன் அஜீத்குமார் (வயது 23), என்ஜினீயர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அஜீத்குமார் தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் மதியம் கோவையில் இருந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

மாலை 3 மணி அளவில் காங்கேயம் அருகே கத்தாங்கன்னி என்ற இடத்தில் சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே கீரனூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த காரும், அஜீத்குமார் வந்த மோட்டார்சைக் கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அஜீத்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் விபத்தில் பலியான அஜீத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்