குடிநீர் வசதி கோரி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்

பொங்கலூர் அருகே உள்ள கெங்கநாயக்கன் பாளையத்தில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-16 23:00 GMT
பொங்கலூர்,

பொங்கலூர் ஒன்றியம், காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட கெங்கநாயக்கன் பாளையத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் சமீபத்தில் கெங்கநாயக்கன் பாளையம் நால்ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் சுப்பிரமணியம், வருவாய் அதிகாரி சபரிகிரி, பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் மீனாட்சி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடனடியாக அத்திக்கடவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அத்துடன் திருமலைநாயக்கன் பாளையத்தில் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். அதன்படி அங்கு குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திருமலைநாயக்கன் பாளையம் பகுதி பொதுமக்கள் அங்கிருந்து குடிநீர் எடுக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திருமலைநாயக்கன் பாளையம் பகுதி மக்கள் குடிநீர் எடுக்க விடாமல் தடுத்தாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தங்களுக்கு குடிநீர் கொடுக்காத திருமலைநாயக்கன்பாளையம் பொதுமக்கள் தங்கள் ஊருக்குள் ரேஷன் பொருட்கள் வாங்க வருவதை தடுக்கும் வகையில் கெங்கநாயக்கன் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு அமர்ந்து வங்கியை திறக்க விடாமல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று காலை 9 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வங்கி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் மதிய உணவும் அங்கேயே தயார் செய்து சாப்பிட்டனர். இதனால் வங்கியை திறக்க முடியாமல் செயலாளர் மற்றும் ஊழியர்கள் நின்றிருந்தனர். மாலை 3 மணி வரை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கெங்கநாயக்கன் பாளையம் நால்ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் மீனாட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜமாணிக்கம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது திருமலைநாயக்கன் பாளையத்தில் மேலும் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் தற்காலிகமாக அத்திக்கடவு குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்வதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். 

மேலும் செய்திகள்